போரூரில் ரூ.2000 கோடி முதலீடு: ஹிட்டாச்சியுடன் ஒப்பந்தம் – முதல்வர் முன்னிலையில் கையெழுத்து
போரூரில் ரூ.2000 கோடி முதலீட்டில் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜப்பான் நாட்டின் ஹிட்டாச்சி குழுமத்தை சேர்ந்தது ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனம். அந்நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை, கடந்த 2023-ம் ஆண்டு சென்னை போரூரில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 5 ஆண்டுகளில் ரூ.2000 கோடி முதலீடு செய்து 3000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், போரூரிலுள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்கத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில் துறை செயலர் வி.அருண் ராய், ஹிட்டாச்சி நிறுவனத்தின் உலகளாவிய தலைமைச் செயல் அலுவலர் ஆண்ட்ரியாஸ் ஷீரன்பெக், ஹிட்டாச்சி இந்தியா நிறுவன மேலாண் இயக்குநர் வேணு நுகரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.