இன்போ எட்ஜ் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக விஐபி சூட்கேஸ், ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டது
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான இன்போ எட்ஜ், தனது பணியாளர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசாக விஐபி சூட்கேஸ், ஸ்வீட் பாக்ஸ் மற்றும் விளக்கு ஆகியவை அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது.
இதுகுறித்து பணியாளர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்த பதிவில்,
“அலுவலகத்துக்குள் நுழைந்தபோது ஒவ்வொரு பணியாளரின் மேசையிலும் கம்ப்யூட்டருக்குப் பதிலாக அழகாக அலங்கரிக்கப்பட்ட சூட்கேஸ், அதனுடன் சேர்த்து ஸ்வீட் பாக்ஸ் மற்றும் தீபமேற்றும் விளக்கு ஆகியவை தீபாவளி பரிசாக வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அனைவருக்கும் இது ஒரு இனிய அதிர்ச்சியாக இருந்தது,”
என்று தெரிவித்துள்ளனர்.
இந்த பதிவுகளைப் பார்த்த இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலர்,
“எங்களுக்கும் இதுபோல ஒரு தீபாவளி பரிசு எப்போது கிடைக்கும்?”
என நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
நொய்டாவில் 1995-ம் ஆண்டு சஞ்சீவ் பிக்சந்தானி என்பவரால் நிறுவப்பட்ட இன்போ எட்ஜ் நிறுவனம், தற்போது இந்தியாவின் முன்னணி ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
தேசிய பங்குச் சந்தை (NSE) புள்ளிவிவரப்படி, இன்போ எட்ஜ் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதனம் ₹86,447 கோடி என பதிவாகியுள்ளது.