உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக உருவெடுத்த இந்தியா: ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா புகழாரம்

ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.

இதன் தொடக்க விழாவில் ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பேசியதாவது: கரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு உலக பொருளாதாரம் படிப்படியாக மீட்சி அடைந்து வருகிறது. தற்போதைய சூழலில், உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. அந்த நாட்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக டிஜிட்டல் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது.

மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் டிஜிட்டல்மயம் சாத்தியமல்ல என்று உலக நாடுகள் கூறி வந்தன. அந்த கூற்றை இந்தியா தவிர்த்து, வெற்றி பெற்றுள்ளது. இந்திய மக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இந்திய அரசு பெரும் சீர்திருத்தங்களை அமல் படுத்தியுள்ளது. 12%, 28% வரி வரம்புகள் நீக்கப்பட்டு, ஜிஎஸ்டி வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இவை போன்ற காரணங்களால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைகிறது.

அதேநேரம், சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு காணப்படுகிறது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்து வருகிறது. இது பெரும் சவாலாக உருவாகக்கூடும்.

இவ்வாறு ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்தார்.

Facebook Comments Box