ஆதார் விவரங்களை புதுப்பிக்கும் சேவைக்கட்டணம் உயர்வு – அக்டோபர் 1 முதல் அமலில்

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை அப்டேட் செய்யும் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.

நாடு முழுவதும் வங்கி, அரசுத் துறை, தொலைபேசி இணைப்பு போன்ற பல்வேறு சேவைகளைப் பெற ஆதார் அட்டை முக்கியமாக பயன்படுகிறது. பயனர்கள் தங்களது தனிப்பட்ட மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை மாற்றி புதுப்பிக்க ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இதற்கான கட்டணம் சேவை வகைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறையின்படி, பயோமெட்ரிக் அப்டேட்டுக்கான கட்டணம் ரூ.125 ஆகவும், பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் போன்ற தனிப்பட்ட தகவல்களை மாற்ற ரூ.75 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு இவை முறையே ரூ.100 மற்றும் ரூ.50 ஆக இருந்தது.

இந்த புதிய கட்டணங்கள் செப்டம்பர் 30, 2028 வரை அமலில் இருக்கும் என UIDAI அறிவித்துள்ளது.

அதேசமயம், ‘My Aadhaar’ போர்ட்டல் மூலம் அடையாளம் மற்றும் முகவரி விவரங்களை ஜூன் 14, 2026 வரை இலவசமாக அப்டேட் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் மற்றும் சிறார்களின் பயோமெட்ரிக் அப்டேட்டுக்கு செப்டம்பர் 30, 2026 வரை எந்தக் கட்டணமும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box