காங்கயம் இனக் காளை ரூ.30 லட்சத்திற்கு விற்பனை!
உடுமலை அருகே நடைபெற்ற பல ரேக்ளா பந்தயங்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற காங்கயம் இனக் காளை, தற்போது ரூ.30 லட்சம் உயர்ந்த விலைக்கு விற்பனையாகியுள்ளது.
உடுமலை அருகே மருள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரி வீரராகவன், பல ஆண்டுகளாக காங்கயம் இனக் காளைகளை வளர்த்து வருகிறார். அண்மையில் கோவை மாவட்டம் நெகமம் செட்டிக்காபாளையத்தில் நடந்த மாநில அளவிலான ரேக்ளா பந்தயத்தில், இவரது மூன்று வயது “மயிலை” என்ற காளை 200 மீட்டர் தூரத்தை 16 விநாடிகளில் கடந்து முதல் பரிசை வென்றது.
இந்த அபார சாதனையின் பின்பு, “மயிலை” காளை ரூ.30 லட்சம் என்ற உச்ச விலைக்கு விற்பனையாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஒரு காளைக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச விலை ரூ.22 லட்சம்தான்; இதனால் தற்போது உருவான விலை புதிய சாதனையாகும்.
இது குறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது: “நாட்டு இனக் காளைகளை பாதுகாக்கும் நோக்கில் காங்கயம் இன மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கான விழிப்புணர்வை பரப்ப ரேக்ளா பந்தயங்களில் பங்கேற்கின்றோம். மயிலை காளை இதுவரை 25க்கும் மேற்பட்ட போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளது,” என்றனர்.