ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆடைகள் விலை குறையும்: ஜிஎஸ்டி 2.0-க்கு ஜவுளித் துறையினர் வரவேற்பு
மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கையால் தொழில் வளர்ச்சி முன்னேறுவதோடு, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அடிப்படை தேவையான ஆடைகளை குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு ஏற்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஜவுளித் தொழில்முனைவோர் தெரிவித்துள்ளனர்.
மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது:
“மக்களுக்கு அடிப்படை தேவையான உணவு, உடை ஆகியவற்றை 5 சதவீத வரிப் பிரிவில் கொண்டுவந்தது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், சிமென்ட் மற்றும் விவசாய பொருட்களையும் 5 சதவீத வரியில் கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது.
முந்தைய 18% மற்றும் 12% வரியுடன் பாலியஸ்டர், விஸ்கோஸ் மற்றும் செயற்கை இழை நூல்கள் உற்பத்தி துறை பலருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது 5 சதவீத வரி சீர்திருத்தம் செய்யப்பட்டதால், ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு ரூ.13,000 குறைவாக செலவு வரும் வகையில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
சூரிய ஒளி ஆற்றல் துறைக்கும் வரி 12% இருந்து 5% ஆக மாற்றப்பட்டுள்ளது. இது தொழில் துறையில் புதிய ஊக்கத்தை வழங்கியுள்ளது. பிரதமர், மத்திய நிதி அமைச்சர் மற்றும் ஜவுளித் தொழில் துறை அமைச்சருக்கு நன்றி. தமிழக அரசு மின்சார கட்டண உயர்வையும் நில கட்டண உயர்வையும் ரத்து செய்ய வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.
இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ராஜ்குமார்:
“மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் வரவேற்கத்தக்கது. ஜவுளி சார்ந்த அனைத்து பொருட்களும் 5 சதவீத வரி பிரிவில் கொண்டு வரப்பட்டுள்ளன. ‘இன்புட் டேக்ஸ் கிரெடிட்’ முறையில் சற்று குழப்பம் உள்ளது; விரைவில் தீர்வு காணப்படும்” என்றார்.
தென்னிந்திய மில்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சுந்தரராமன் கூறியதாவது:
“2017-ல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, செயற்கை இழை மூலப்பொருட்களுக்கு 18%, நூல்களுக்கு 12% வரி விதிக்கப்பட்டது. துணி மற்றும் ஆடைகள் 5% வரியில் இருந்தன. இதனால் ஆடைகள் விலை உயர்ந்தது. தற்போது ஜவுளி சங்கிலி தொடர்புடைய அனைத்தும் 5% ஜிஎஸ்டி வரியில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசுக்கு நன்றி. இது தொழில் வளர்ச்சி மற்றும் எளிய மக்களுக்கு குறைந்த விலையிலான ஆடைகளை பெற்றுத் தரும்” என்று தெரிவித்தார்.
‘லகு உத்யோக் பாரதி’ தமிழ்நாடு மாநில தலைவர் வீர்செழியன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கல்யாண் சுந்தரம்:
“மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் வரவேற்கத்தக்கது. பிரதமர் சுதந்திர தினத்தில் வாக்குறுதி அளித்தபடி, செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மறைமுக வரி அமைப்பில் வரலாற்று முன்னேற்றமாகும்” என்றனர்.
தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின் தலைவர் அருள்மொழி:
“செயற்கை இழை மீது 5% வரி அமல்படுத்தப்பட்டதால், ‘ஓஇ’ நூற்பாலைகளுக்கு மூலப்பொருட்கள் குறைந்த செலவில் கிடைக்கும். பாலியஸ்டர் மற்றும் விஸ்கோஸ் நூல்களுக்கு 5% வரி விதிப்பால் ஜவுளித் துணி உற்பத்தியாளர்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசுக்கு நன்றி” என்றார்.
இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன்:
“முக்கிய பொருட்களுக்கு குறைந்த வரி, வரி மாறுபாட்டை நீக்குதல் மற்றும் எளிதாக்கப்பட்ட நடைமுறைகள் நுகர்வை அதிகரிக்கும், தொழில்துறையின் போட்டித்திறனை வலுப்படுத்தும். ஜவுளி ஏற்றுமதி சந்தைகளில் இந்தியா பங்கு 10–12%, செயற்கை இழை ஜவுளி பொருட்கள் 2–3% மட்டுமே. இந்நடவடிக்கை மூலம் இந்திய செயற்கை இழைத் துறையில் வளர்ச்சி அதிகரிக்கும். இதற்கும் மத்திய அரசுக்கு நன்றி” என்றார்.