சத்தீஸ்கரில் 77 நக்சலைட்கள் சரண்

நேற்று சத்தீஸ்கரில் 42 பெண்கள் உட்பட 77 நக்சலைட்கள் பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். நக்சல் அபாயம் நிலவும் மாநிலங்களில் அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குள் நக்சலைட்கள் ஒழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி தெரிவித்துள்ளார். இதனால் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நக்சலைட்கள் சரணடைவது அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல் தலைவர் சோனு சரண் தலைமையில் 60 பேர் நேற்று முன்தினம் சரணடைந்தனர்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 10 பெண்கள் உட்பட 27 நக்சலைட்கள் சிஆர்பிஎப் போலீஸ் அதிகாரிகள் முன்பு நேற்று சரணடைந்தனர். இவர்களில் பலரது தலைக்கு ரூ.50 லட்சம் வரை பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தில் நேற்று நக்சல் கமாண்டர் ராஜ்மன் மண்டாவி தலைமையில் 32 பெண்கள் உட்பட 50 நக்சலைட்கள் எல்லை பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் சரணடைந்தனர். இந்நிகழ்வில் அவர்கள் 39 ஆயுதங்களையும் ஒப்படைத்தனர். பிஜப்பூர் மாவட்டம் பாய்ரம்கர் பகுதியில் இன்று காலை 120 நக்சலைட்கள் சரணடைவார்கள் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box