வாகனப் பரிசோதனையின் போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை ம.பி. போலீஸார் சுருட்டியது எப்படி?
வாகனப் பரிசோதனையின்போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை போலீஸார் சுருட்டியது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில், கடந்த புதன்கிழமை இரவு சப்-டிவிஷனல் போலீஸ் ஆபீஸர் (எஸ்டிஓபி) பூஜா பாண்டே தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் ரூ.3 கோடி ஹவாலா பணம் சிக்கியது. அந்த பணத்தை பறிமுதல் செய்யாமல், காரை ஓட்டி வந்த ஹவாலா டீலர் சோஹன் பார்மர் உடன் பணத்தை பாதியாகப் பகிரலாம் என போலீஸார் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுநாள் காலை பந்தோல் போலீஸ் நிலையத்துக்கு வந்த ஹவாலா டீலர் சோஹன் பார்மர், தனது பணம் பறிபோய்விட்டதாக புகார் அளித்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த எஸ்டிஓபி பூஜா பாண்டே, சோஹன் பார்மரிடம் பையில் ரூ.1.45 கோடி பணம் உள்ளது, மீதமுள்ள ரூ.1.5 கோடியை பிரித்துக் கொள்கிறோம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோஹன் பார்மர் பணத்தை எண்ணிப் பார்த்த போது, அதில் ரூ.25.6 லட்சம் குறைவாக இருந்தது. அந்த பணத்தையும் போலீஸாரே அபகரித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் கிடைக்கும்போது, ஜபல்பூர் போலீஸ் டிஐஜி, ஐஜி பிரமோத் வர்மா ஆகியோர் போலீஸ் நிலையத்தை சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஹவாலா பணம் போலீஸார் கையாண்டதை கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எஸ்டிஓபி பூஜா பாண்டே, டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்பித் பைராம் உள்ளிட்ட 11 பேரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், 11 பேருக்கும் லக்னவாடா போலீஸ் நிலையத்தில் பணம் வழிப்பறி மற்றும் கிரிமினல் சதி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்போல், பெண் போலீஸ் அதிகாரி பூஜா பாண்டே, டவுன் போலீஸ் எஸ்ஐ அர்பித் பைராம், கான்ஸ்டபிள் ஜக்தீஷ் ஆகியோர் காவலில் வைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.