ராஜஸ்தானில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 20 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

ராஜஸ்தானில் ஜெய்சால்மரிலிருந்து ஜோத்பூர் செல்லும் பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜெய்சால்மரிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு ஜோத்பூர் நோக்கி புறப்பட்ட பேருந்து, ஜெய்சால்மர் – ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்தின் பின்பகுதியில் புகை வெளியேறியது. இதை அறிந்த ஓட்டுனர் உடனடியாக பேருந்தை ஓரம்கட்டி நிறுத்த முயற்சித்தார். எனினும் கண்ணிமைக்கும் முன் தீ பேருந்து முழுவதும் பரவியது. இதைக் கண்ட பொதுமக்கள் பலரும் உடனடியாக ஓடி தீயை அணைக்க முயன்றனர். சில நிமிடங்களில் தீயணைப்பு வீரர்களும் காவல்துறை அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர்.

இந்த தீ விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 16 பேர் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பேருந்தில் மின்கசிவு ஏற்பட்டதே தீவிபத்திற்கு காரணம் என தெரிய வந்ததாக போலீஸ் கூறுகின்றனர்.

இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுச் சொன்னார்: “ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஏற்பட்ட விபத்தில் உயிர் இழப்பு மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.”

மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Facebook Comments Box