பிஹார் தேர்தல்: பாஜக சேர்க்கை பெற்றார் நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூர்

வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிரபல இளம் நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூர் பாஜக கட்சியில் இணைந்துள்ளார்.

பிஹாரின் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த மைதிலி தாக்கூர், 14 வயது முதல் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தற்போது டெல்லியில் வசித்து வரும் அவர், இந்தி, பெங்காலி, மைதிலி, உருது, மராத்தி, போஜ்பூரி, பஞ்சாபி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார். சமீபத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் மற்றும் பிஹார் பொறுப்பாளர் வினோத் தாவ்டே, மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோரை சந்தித்ததையடுத்து, அவர் கட்சியில் இணைவார் எனவும், தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது எனவும் செய்திகள் வெளியானது.

இதையடுத்து அளித்த பேட்டியில் மைதிலி தாக்கூர் கூறியதாவது: “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளது. என் சொந்த ஊரான பெனிபட்டி தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புகிறேன். என் கிராமப்புற மக்களுடன் நெருக்கமான உறவு இருப்பதால் அங்கிருந்து தொடங்குவது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருக்கும். மக்களுடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு அங்கிருந்தே கிடைக்கும்” என்றார்.

இந்நிலையில், பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் குமார் ஜெய்ஸ்வால் முன்னிலையில் இன்று மைதிலி தாக்கூர் பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரின் பணியால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவர்களிடம் இருந்து ஊக்கம் பெற்று சமூக சேவைக்காக அரசியலில் இணைந்துள்ளேன். ஒரு கட்சியை ஆதரிப்பதால் ஒருவரை அரசியல்வாதியாக ஆக்கிவிடாது. மக்களுக்கு சேவை செய்யவும், நல்ல சிந்தனையை பரப்பவும் தான் நான் இத்துறைக்கு வந்துள்ளேன்.

நான் மிதிலாவின் மகள்; என் இதயம் மிதிலாவில்தான் வாழ்கிறது. எனக்கான பொறுப்பு மற்றும் திட்டங்களை கட்சி தீர்மானிக்கும், அதை நான் முழுமையாக பின்பற்றுவேன்” என்று தெரிவித்தார்.

பிஹார் மட்டுமல்லாது, வடஇந்திய மாநிலங்களிலும் பெரும் ரசிகர்கள் வட்டம் பெற்றுள்ள மைதிலி தாக்கூர் பாஜகவில் இணைந்திருப்பது, அக்கட்சிக்கு தேர்தலில் பலனாக அமையும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, 40 தொகுதிகள் கொண்ட மிதிலாஞ்சல் பகுதியில், அவரின் தாக்கம் முக்கிய பங்காற்றும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

Facebook Comments Box