விசாகப்பட்டினத்தில் ரூ.87,520 கோடி மதிப்பில் கூகுள் ஏஐ மையம்: பிரதமரிடம் விவரித்த சுந்தர் பிச்சை

விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கூகுள் அமைக்க உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம் குறித்து கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கினார்.

அமெரிக்காவிற்கு வெளியே உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மையமாகும் Google AI Hub இந்தியாவில் அமைக்கப்பட உள்ளது. டெல்லியில் பிரதமரை சந்தித்த சுந்தர் பிச்சை, இந்த திட்டத்தைப் பற்றி விவரித்தார்.

சுந்தர் பிச்சை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “விசாகப்பட்டினத்தில் முதன்முதலாக அமைக்கப்படும் கூகுள் ஏஐ மையம் தொடர்பாக பிரதமருடன் விவரங்களை பகிர்ந்ததில் மகிழ்ச்சி. இது ஒரு முக்கிய மைல்கல் வளர்ச்சி.

இந்த மையத்தில் ஜிகாவாட் அளவிலான கணினி திறன், புதிய சர்வதேச நீர்மூழ்கி நுழைவு வாயில் மற்றும் பெரிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் மற்றும் பயனர்களுக்கு நவீன தொழில்நுட்பம் கிடைக்கும். செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை விரைவாக முன்னெடுக்க உதவும். மேலும், நாட்டின் வளர்ச்சிக்கான ஊக்கத்தையும் வழங்கும்” என அவர் கூறினார்.

பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஆந்திரப்பிரதேசத்தின் முக்கிய நகரமான விசாகப்பட்டினத்தில் கூகுள் ஏஐ மையம் தொடங்குவதை அறிந்து மகிழ்ச்சி. ஜிகாவாட் அளவிலான தரவு மையத்துடன் கூடிய இந்த முதலீடு, வளர்ந்த பாரதம் என்ற எங்கள் தொலைநோக்குத் திட்டத்தோடு பொருந்துகிறது.

தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தும் முறையில் இது முக்கிய பங்காற்றும். இது அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவை அணுக அனுமதிக்கும். நமது குடிமக்களுக்கு நவீன கருவிகளை வழங்கும். டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும். உலகளாவிய தொழில்நுட்ப முன்னணி என இந்தியாவின் இடத்தை உறுதிப்படுத்தும்” எனக் கூறினார்.

கூகுள் ஏஐ மைய பணிகள் அடுத்த 5 ஆண்டுகளில் முடிவடையும் என்றும், உலகளாவிய கூகுள் நெட்வொர்க்குடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், “கூகுள் இந்தியாவில் 21வது ஆண்டாக உள்ளது. 5 ஆண்டுகளில் 14,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். புதுடெல்லி மற்றும் மும்பையில் நாங்கள் கிளவுட் சாதனங்களை உருவாக்கி வருகிறோம்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Facebook Comments Box