முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை: தமிழக, கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை அமைக்க வேண்டும் என்று கோரிய மனு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தமிழக மற்றும் கேரள அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
‘சேவ் கேரளா பிரிகேட்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு நேற்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.கிரி தெரிவித்ததாவது:
“முல்லை பெரியாறு அணை 130 ஆண்டுகள் பழமையானது. அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் சுமார் ஒரு கோடி மக்கள் அச்சத்தில் உள்ளனர்” என்று கூறினார்.
இதற்கு நீதிபதிகள்,
“தற்போதைய அணையை பலப்படுத்தும் வழிகளை பரிசீலிக்கலாம். ஆனால், இரு மாநிலங்களும் சம்பந்தப்பட்டதால், அணையின் காரணமாக யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பது மனுவில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை,”
என்று கூறினர்.
மேலும், பழைய அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவது குறித்து மத்திய அரசு, தமிழக அரசு, கேரள அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை தங்களது பதிலை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பின்னர், வழக்கின் விசாரணை அடுத்த தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.