பாஜகவுக்கு இணையான தொகுதிகளை நிதிஷ் பெற்ற ரகசியம்: சிராக் பாஸ்வானால் பலன் உண்டாகுமா?

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் சமமான தொகுதிகளை முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான கட்சி பெற்றது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம், லோக் ஜன சக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருப்பதால் அதனால் எந்தவிதமான பலன் கிடைக்கும் என்பதிலும் ஆர்வம் காணப்படுகிறது.

மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலத்தில், இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஜேடியு தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தற்போது ஆட்சி செய்து வருகிறது.

இம்முறை நடைபெறும் தேர்தலில், நிதிஷ் தலைமையிலான ஜேடியு கட்சி பாஜகவுடன் சமமாக 101 இடங்களில் போட்டியிடுகிறது. இதற்குப் பின்னால் பல்வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

2005 ஆம் ஆண்டில் லாலுவின் ஆர்ஜேடி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து முதன்முறையாக ஆட்சிக்கு வந்தவர் நிதிஷ்குமார். அதன் பிறகு இந்த தேர்தல் தான் அவர் பாஜகவுக்கு இணையாக இடங்களைப் பெற்றிருப்பது. இதற்கு பிஹாரில் பாஜகவின் வளர்ந்துவரும் அரசியல் ஆதிக்கம், நிதிஷ்குமாரின் வயது மூப்பு, ஆளும் எதிர்ப்பு உணர்வு போன்ற காரணங்களும் குறிப்பிடப்படுகின்றன.

2020 தேர்தலில் ஜேடியு 115 தொகுதிகளிலும் பாஜக 110 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அப்போது ஜிதன் ராம் மாஞ்சியின் எச்ஏஎம் கட்சி 7 இடங்களில், முகேஷ் சாஹ்னியின் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) 4 இடங்களில் போட்டியிட்டது. தற்போது விஐபி இண்டியா கூட்டணியில் இணைந்துள்ளது.

உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 6 இடங்களைப் பெற்றிருந்தது. அந்தக் கட்சி இடைப்பட்ட காலத்தில் என்டிஏவிலிருந்து விலகி மீண்டும் சேர்ந்து கொண்டது.

கடந்த தேர்தலில் எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான் தனியாகப் போட்டியிட்டு 135 இடங்களில் நின்றும் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால் அவரது நடவடிக்கைகள் நிதிஷ்குமாருக்கு பெரிய இழப்பாக அமைந்தன. அதன் விளைவாக பாஜகவுக்கு 74 இடங்கள் கிடைத்த நிலையில், ஜேடியுவுக்கு வெறும் 43 இடங்களே கிடைத்தன. இதற்கு பின்னணியாக சிராக் பாஸ்வானுக்கு பாஜகவின் மறைமுக ஆதரவு இருந்தது என ஜேடியுவில் குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது மத்திய அமைச்சரான சிராக் பாஸ்வான் தலைமையிலான எல்ஜேபி, இந்த முறை 29 இடங்களுடன் என்டிஏ கூட்டணியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் என்டிஏ வலுவாகி மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கை பாஜக வட்டாரத்தில் நிலவுகிறது.

பிஹார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் கூறுகையில், “என்டிஏ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பரஸ்பர ஒப்புதலுடன் தொகுதி ஒப்பந்தத்தை முடித்துள்ளன. இதனை அனைத்து தலைவர்களும் மற்றும் தொண்டர்களும் வரவேற்கின்றனர். பிஹார் மீண்டும் என்டிஏ ஆட்சிக்குத் தயாராக உள்ளது,” என்றார்.

இதே வேளையில், எதிர்க்கட்சியான ஆர்ஜேடி தலைமையிலான இண்டியா கூட்டணி, பல கட்சிகளை இணைத்து பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. இது என்டிஏவிற்கு வலுவான சவாலாகக் கருதப்படுகிறது.

பிஹார் தேர்தலின் முதல் கட்டம் நவம்பர் 6 ஆம் தேதி, இரண்டாம் கட்டம் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. முடிவுகள் நவம்பர் 14 அன்று அறிவிக்கப்படும்.

Facebook Comments Box