பிஹார் தேர்தலில் 18 இடங்களில் போட்டியிடுவது உறுதி: சிபிஐ(எம்எல்) கட்சி
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தது 18 இடங்களில் போட்டியிட திட்டமிட்டதாகவும், மேலும் சில தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சிபிஐ(எம்எல்) பொதுச் செயலாளர் தீபாங்கர் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நவம்பர் 6-ம் தேதி, இரண்டாம் கட்டம் நவம்பர் 11-ம் தேதியில் நடைபெறும். அதன் முடிவுகள் நவம்பர் 14-ம் தேதியில் வெளியாகும்.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜேடியு மற்றும் பாஜக தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்களில், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தலா 6 இடங்களில் போட்டியிடுகின்றன.
எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணியில் இன்னும் சில தொகுதிகளில் பங்கீடு இறுதியாகவில்லை. இதில் ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ(எம்எல்), சிபிஐ, சிபிஎம் மற்றும் முகேஷ் சாஹ்னியின் விகாஷீல் இன்சான் கட்சி ஆகியவை உள்ளன.
தீபாங்கர் பட்டாச்சார்யா கூறியதாவது: “கடந்த முறை நாங்கள் போட்டியிட்ட 19 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான பங்கீடு மகா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
பிஹார் கிராமப்புறங்களில் கட்சியின் பிரச்சாரம் தொடங்கிவிட்டது. எங்கள் வேட்புமனுக்கள் அக்டோபர் 14-ம் தேதி தாக்கல் செய்யப்படும். ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் டெல்லியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடித்துள்ளனர். இதன் முடிவுகள் குறித்து எனக்கு தகவல் இல்லை. ஆர்ஜேடி சிறிய கூட்டணிக் கட்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கும், காங்கிரஸ் வாடிக்கையான முறையில் செயல்படும் என்று நம்புகிறேன்.”
2020 தேர்தலில் போட்டியிட்ட 19 தொகுதிகளில் 12 இடங்களில் வெற்றி பெற்ற சிபிஐ(எம்எல்), இந்த முறை சுமார் 40 இடங்களை எதிர்பார்க்கிறது.