பாதிக்கப்பட்ட மாணவியை குறை சொல்கிறாரா? – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்

மேற்கு வங்கத்தின் துர்காப்பூர் நகரில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவி மீது நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பின்னர், “பெண்கள் இரவில் கல்லூரியிலிருந்து வெளியே செல்லக் கூடாது” என்ற சர்ச்சைக்குரிய கருத்துக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

துர்காப்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை, அவர் தனது ஆண் நண்பருடன் மாலை வெளியே சென்று இரவு 8:30 மணிக்கு கல்லூரி விடுதியில் திரும்பினார். அப்போது ஒரு குழு மாணவர்கள் இந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். ஆண் நண்பரும் அங்கிருந்து விலகிச் சென்றார்.

இதுபற்றி பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “துர்காப்பூரில் மருத்துவ மாணவிக்கு நடந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. போலீசார் தற்போது மூவரை கைது செய்து, மற்றவர்களை தேடுகின்றனர். ஆனால் நள்ளிரவு 12:30 மணிக்கு 23 வயது மாணவி கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்தார் என்பதும் கவனிக்கப்பட வேண்டும். இதற்குக் கேள்வி யார்?” என்று கூறினார்.

அவர் மேலும், “குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் கல்லூரிகள் தங்களின் வளாகங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். ‘இரவு நேர கலாச்சாரத்திற்கு’ முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

இதற்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, “முதல்வராக இருந்தும், மம்தா பானர்ஜியின் கருத்து பெண்மையின் மீது குறையாகும். ஆர்.ஜி.கர் மற்றும் சந்தேஷ்காலி சம்பவங்களுக்குப் பிறகு, இப்போதும் பாதிக்கப்பட்டவரை குறை கூறுகிறார்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார், “முந்தைய ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி சம்பவத்திற்கு பிறகு, தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு குறைவான இரவு நேர வேலைகளை வழங்க அறிவிக்கப்பட்டது. இப்போது முதல்வர் பெண்கள் இரவில் வெளியே செல்லக் கூடாது என்று கூறுகிறார். எல்லா பெண்களும் வீட்டில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா?” என்று வினவினார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார், “மாலை நேரத்திற்குப் பிறகு, ஒரு நாளில் 12 மணி நேரம், பெண்களை வீட்டில் அடைத்து வைக்க முடியுமா? பெண்கள் மருத்துவமனைகள், ஐ.டி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆண்கள் போலவே வேலை செய்கிறார்கள். இன்றைய இந்தியப் பெண்கள் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் வெற்றிபெற்று வருகின்றனர். ஆனால் இரவு 8 அல்லது 9 மணிக்கு அவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் எனச் சொல்ல முடியாது. பெண்களை பாதுகாக்கும் சட்டங்களை உருவாக்குவது முதல்வரின் பொறுப்பு. ஆனால் இந்த கருத்து அபத்தமானது. அதை நான் ஆதரிக்க முடியாது” என்றார்.

Facebook Comments Box