பிஹார் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவு — பாஜக, ஜேடியூ தலா 101 இடங்களில் போட்டி
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) தொகுதிப் பங்கீடு சுமுகமாக நிறைவு பெற்றுள்ளது. இதன்படி, பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் (ஜேடியூ) தலா 101 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறும். இந்தத் தேர்தலில் ஆளும் என்டிஏ கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் ஆகியவை அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது.
மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பிஹாரில், என்டிஏ கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று பல்வேறு கட்டங்களில் நடந்தது. முதலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மற்றும் ஜேடியூ தலைவர்கள் சஞ்சய் ஜா, லல்லன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் பாஜக தலைவர் நட்டா இல்லத்திலும், அதன் பிறகு பாஜக தலைமையகத்திலும் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், தர்மேந்திர பிரதான், பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பிஹார் தேர்தலை முன்னிட்டு என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101, லோக் ஜனசக்தி – ராம்விலாஸ் (எல்ஜேபி-ஆர்) 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) 6 மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) 6 இடங்களில் போட்டியிடும். அனைத்து கூட்டணி தலைவர்களும் இதனை வரவேற்றுள்ளனர்,” என தெரிவித்துள்ளார்.
அதேசமயம், எச்ஏஎம் தலைவர் மற்றும் பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், தனது சமூக வலைதளப் பதிவில் அவர் “எனது கடைசி மூச்சு வரை பிரதமர் மோடியுடன் இருப்பேன்” என்று கூறி தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த தேர்தலில் 99 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட ராஷ்டிரிய லோக் மோர்ச்சா எந்த இடத்திலும் வெற்றிபெறவில்லை. இம்முறை என்டிஏ கூட்டணியில் இணைந்து 6 வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடுகிறது.
மெகா கூட்டணியில் முரண்பாடு
இதற்கிடையில், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன. டெல்லியில் நேற்று காங்கிரஸ் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டு அக்டோபர் 2 அன்று தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அதேபோல், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் தனித்துப் போட்டியிட உள்ளன. இதில் ஏஐஎம்ஐஎம், பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 100 இடங்களில், ஆம் ஆத்மி மொத்தம் 243 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது.