“இந்திரா காந்தியின் ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ முடிவு தவறானது” — ப.சிதம்பரம் கருத்து; சர்ச்சை வெடிப்பு
1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட “ஆபரேஷன் புளூ ஸ்டார்” ராணுவ நடவடிக்கை தவறான முடிவு என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இமாச்சல் மாநிலத்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் பேசிய அவர்,
“பொற்கோயிலில் ராணுவம் நுழைந்து ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ நடத்தப்பட்டது தவறு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அந்த நடவடிக்கையின் விளைவாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது உயிரையே அர்ப்பணிக்க நேர்ந்தது. அந்த தவறுக்கு ராணுவம், காவல் துறை, புலனாய்வு அமைப்புகள் மற்றும் குடிமைப் பணியாளர்களும் ஒருபங்கு வகித்துள்ளனர்,” என கூறினார்.
அவர் மேலும், “நான் பஞ்சாபுக்கு சென்றபோது கவனித்தது என்னவென்றால், அங்குள்ள காலிஸ்தான் பிரிவினைவாதம் முழுமையாக ஒழிந்துவிட்டது. இப்போது அங்கு உண்மையான பிரச்சனை என்பது பொருளாதார சூழல் தான்,” எனவும் தெரிவித்தார்.
ஆபரேஷன் புளூ ஸ்டார் குறித்து சிறிது பின்னணி:
1984-ம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் தஞ்சமடைந்திருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இந்திய ராணுவத்துக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ராணுவம் கோயிலுக்குள் நுழைந்து தீவிரவாதிகளை ஒடுக்கியபோதும், அந்த நடவடிக்கையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்திரா காந்தியின் பாதுகாவலர்களாக இருந்த சீக்கியர்கள் ப்யாந்த் சிங் மற்றும் சட்வந்த் சிங் ஆகியோர், 1984 அக்டோபர் 31 அன்று துப்பாக்கியால் 33 ரவுண்டுகள் சுட்டு அவரை கொன்றனர். மத அடிப்படையில் பாதுகாவலர்களை மாற்ற வேண்டுமென உளவுத்துறை எச்சரித்திருந்த போதிலும், இந்திரா காந்தி அதை மறுத்துவிட்டார்.
இந்த தாக்குதலில், இந்தியாவின் “இரும்புப் பெண்மணி” என போற்றப்பட்ட இந்திரா காந்தி, 66 வயதில் உயிரிழந்தார்.