மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை – மூவர் கைது

மேற்கு வங்கத்தின் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மாணவியை, பலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது: “இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கின் தன்மை மிகுந்த உணர்ச்சிகரமானது என்பதால், கூடுதல் தகவல்களை தற்போது வெளிப்படுத்த முடியாது,” என கூறினர்.

பாதிக்கப்பட்ட மாணவி, ஒடிசா மாநிலத்தின் ஜலேஸ்வர் பகுதியைச் சேர்ந்தவர். அவர் பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு பயின்று வந்தார். கடந்த அக்டோபர் 10ஆம் தேதி இரவு உணவுக்காக நண்பருடன் கல்லூரி வளாகத்துக்கு வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில் மூன்று பேர் அவர்களை திடீரென மிரட்டியதால், நண்பர் பயந்துபோய் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் மாணவியை ஒரு தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: “விசாரணையின் தொடக்கத்தில், மாணவி இரவு 8.00 முதல் 8.30 மணிக்குள் நண்பருடன் வெளியே சென்றது தெரியவந்துள்ளது. அடையாளம் தெரியாத மூவர் அங்கு வந்து மாணவியை தனியாக விட்ட நண்பரை அச்சுறுத்தி ஓடவிட்டனர். பின்னர், மாணவியின் மொபைலை பறித்து, கல்லூரி வளாகத்துக்கு வெளியே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். சம்பவத்தை யாரிடமும் பகிர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என மிரட்டியுள்ளனர். மாணவியின் வாக்குமூலம் பதிவாகி உள்ளது; அவளுடன் சென்ற நண்பரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார் கூறியதாவது:

“மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய வழக்குகளில் போலீசார் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது வருத்தகரமானது. இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் முதல்வர் மம்தா பானர்ஜி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

Facebook Comments Box