மத்திய அரசு எப்போதும் உங்களுடன்: மணிப்பூரில் பிரதமர் மோடி உறுதி
“மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது. மணிப்பூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் அனைத்து அமைப்புகளும் அமைதியின் பாதையில் நகர வேண்டும்,” என மணிப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
2023-ஆம் ஆண்டு மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரம் குகி – மேத்தி சமூகங்களுக்கு இடையே பிளவை அதிகரித்தது. இதனால் மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்த நிலைமையை சமப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், கலவரத்துக்குப் பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக இன்று மணிப்பூருக்குச் சென்றார்.
அங்கு அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்த சுராசந்த்பூரில், வன்முறையால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களைக் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் சுராசந்த்பூர் அமைதி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ₹7,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதன்பின் உரையாற்றிய பிரதமர் மோடி,
“தைரியமும் உறுதியும் நிறைந்த நிலம் மணிப்பூர். இங்குள்ள மலைகள் இயற்கையின் அற்புதமான பரிசு. இவை, உங்கள் கடின உழைப்பை வெளிப்படுத்துகின்றன. மணிப்பூர் மக்களின் உற்சாகத்துக்கு நான் தலை வணங்குகிறேன். மத்திய அரசு, மணிப்பூரில் முன்னேற்றத்தை கொண்டு வர உறுதிபூண்டுள்ளது. இதற்காக ₹7,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.
மணிப்பூர் சர்வதேச எல்லையைத் தொடும் மாநிலம். போக்குவரத்து இங்கு நீண்டநாள் சிக்கலாக உள்ளது. மோசமான சாலைகளால் நீங்கள் சந்திக்கும் கஷ்டங்களை நன்கு அறிவேன். 2014க்கு பின் மணிப்பூரின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த நான் பாடுபட்டேன். ரயில் மற்றும் சாலை இணைப்பை வலுப்படுத்தும் பணியில் கவனம் செலுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் மணிப்பூர் வடகிழக்கு முழுவதையும் ஒளிரச் செய்யும். இங்கு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மலைப்பகுதி பழங்குடியினரின் வாழ்க்கையை மேம்படுத்தும். புதிய கல்வி, சுகாதார வசதிகளையும் வழங்கும்.
அமைதி இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை. பள்ளத்தாக்கு மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள அமைப்புகளுடன் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. அனைவரும் அமைதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலம் உங்கள் கனவுகள் நனவாகவும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாப்பாகவும் அமையும். நான் உங்களுடன் இருக்கிறேன்; மத்திய அரசு உங்களுடன் நிற்கிறது. உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான அனைத்தையும் செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம். வீடற்றோருக்காக 7,000 வீடுகள் கட்டப்படுகின்றன.
பெண்களுக்காக விடுதி அமைக்கப்படுகின்றது. இடம்பெயர்ந்தோரின் முன்னேற்றத்திற்காக ₹500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடி இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தவும் செயல்படுகிறோம். மணிப்பூரின் கலாச்சாரம் பெண்களின் வலிமையை வெளிப்படுத்துகிறது. மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்றுவதே எங்கள் நோக்கம். இடம்பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்வு கிடைக்கவும், அமைதி நிலைக்கவும் மத்திய அரசு, மாநில அரசுடன் இணைந்து தொடர்ந்து செயல்படும்,” என்றார் பிரதமர் நரேந்திர மோடி.