“வர்த்தக தடைகளை நீக்க பேச ஆவல்” – ட்ரம்ப்; “இணைந்து முன்னேறுவோம்” – மோடி

இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தகத் தடைகளை அகற்றுவதற்கான பேச்சுவார்த்தை விரைவில் தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் சாதகமான பதில் அளித்துள்ளார்.

சமீப மாதங்களில் அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்து வரும் நிலையில், இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதனால் இந்திய தொழில்துறைக்கு சிரமங்கள் ஏற்பட்டன.

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் ட்ரம்ப், “இந்தியா-அமெரிக்கா வர்த்தகத் தடைகளை தகர்க்கும் பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருகின்றன. என் நண்பர் மோடியுடன் விரைவில் உரையாடப் போவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இருநாடுகளுக்கும் சாதகமான முடிவுகள் எட்டப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.” என பதிவிட்டார்.

இதற்கு பிரதமர் மோடி பதிலளித்ததில், “இந்தியா மற்றும் அமெரிக்கா இயல்பான கூட்டாளிகள். நம் வர்த்தக விவாதங்கள், இரு நாடுகளின் அபரிமிதமான வாய்ப்புகளை கண்டறிய உதவும். ட்ரம்ப்புடன் பேசுவதற்கு நானும் எதிர்நோக்குகிறேன். நமது மக்களுக்கு வளமான, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க உறுதியாக செயல்படுவோம்.” என்று குறிப்பிட்டார்.

இரு தலைவர்களும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருப்பது, இருநாட்டுத் தொடர்புக்கு நல்ல முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Facebook Comments Box