டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்ற ராகுல், கார்கே, அகிலேஷ் உள்ளிட்ட எம்.பிக்கள் கைது
வாக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் எம்.பிக்கள் கைது செய்யப்பட்டனர்.
பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடைபெற்று, ஆகஸ்ட் 1ஆம் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இண்டியா கூட்டணி குற்றஞ்சாட்டியது.
இதனை எதிர்த்து, நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், அங்கிருந்து தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், அகிலேஷ் யாதவ், டி.ஆர். பாலு, திருச்சி சிவா, சரத் பவார், சஞ்சய் ராவத், மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட 25 கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பங்கேற்றனர்.
ஆனால், நாடாளுமன்ற வளாகத்திலேயே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், ராகுல், கார்கே, பிரியங்கா, அகிலேஷ் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, வாகனங்களில் ஏற்றி அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர், ராகுல் காந்தி, “தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. அரசியலமைப்பை காக்கும் எங்கள் போராட்டம் தொடரும்” என தெரிவித்தார்.