‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் – பிரசாந்த் கிஷோர்
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு தொடர்பாக, தேர்தல் ஆணையம் முழுமையான விசாரணை நடத்தி, பொதுமக்களுக்கு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு பிரச்சனைக்கெதிராக, இன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி உட்பட இண்டியா கூட்டணி எம்.பிக்கள் பேரணியாக சென்றனர். அவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரசாந்த் கிஷோர், “எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தல் ஆணையம் இதைச் சம்பந்தமாக விசாரித்து, மக்களுக்கு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
பிஹாரின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து எங்கள் நிலைப்பாடு என்னவென்றால் – 23 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய செயல்முறை மேற்கொள்ளப்படுவது ஏன் என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும். வங்கதேசம் மற்றும் நேபாளத்திலிருந்து ஊடுருவிகள் நுழைந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். மத்தியிலும் மாநிலத்திலும் தங்கள் அரசுகள் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது, இந்த ஊடுருவிகள் நுழைந்து வாக்களிக்கும் உரிமையைப் பெற்றதாக உள்துறை அமைச்சர் சொல்லுகிறாரா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.