கொரோனா எனும் உலகளாவிய தாக்கத்தால் பொருளாதாரம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மெல்ல முன்னேறி வருகிறது. இந்தச்சூழலில் மத்திய அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று(பிப்., 1) தாக்கலானது. இதன் மீதான எதிர்பார்ப்பால் பங்குச்சந்தைகளில் வர்த்தகவாரத்தின் முதல்நாளிலேயே அதிகம் ஏற்றம் கண்டன. வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 443.06 புள்ளிகள் உயர்ந்து 46,728.83 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 114.85 புள்ளிகள் உயர்ந்து 13,749.45ஆகவும் வர்த்தகமாகின.
தொடர்ந்து பட்ஜெட் தாக்கலில் பல முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். குறிப்பாக நாட்டு மக்களின் உடல் நலனை உறுதிப்படுத்தும் சுகாதாரத்திட்டங்கள் தான் இந்த பட்ஜெட்டின் முதல் முக்கிய அறிவிப்பாக இருந்தது. இதுதவிர எல்.ஜ.சி. பங்குகளை தனியாருக்கு விற்க திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, உள்கட்டமைப்பு, வசதிகள் மேம்பாடு, ஆரோக்கியமான இந்தியா, நல்லாட்சி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, பெண்களுக்கான அதிகாரம், ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகிய எட்டு அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பங்குச்சந்தைகள் மேலும் எழுச்சி கண்டன.
வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 2,314.85 புள்ளிகள் உயர்ந்து 48,600.61ஆகவும், நிப்டி 646.60 புள்ளிகள் உயர்ந்து 14,281.20ஆகவும் நிறைவடைந்தது. இதன்மூலம் முதன்முறையாக சென்செக்ஸ் 48 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 14 ஆயிரம் புள்ளிகளையும் கடந்து புதிய சாதனை படைத்தது. சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகள் 27 நிறுவன பங்குகள் உயர்ந்தும், நிப்டியை அளவிட உதவும் 50 நிறுவன பங்குகளில் 43 நிறுவன பங்குகள் உயர்ந்தும் காணப்பட்டன. இன்றைய வர்த்தகத்தில் வங்கி சார்ந்த பங்குகள் அதிக லாபம் கண்டன.
The post பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பிலேயே இன்றைய பங்குச்சந்தை 48000 புள்ளிகளை தாண்டி சாதனை appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box