கொரோனா வைரஸால் இந்தியாவில் எத்தனை மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்தனர் என்று மாநிலங்களவையில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பதில் அளித்தார்.
அவர் கூறுகையில், “ஜனவரி 22-ம் தேதிவரை கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 162 மருத்துவர்கள், 44 ஆஷா பணியாளர்கள், 107 செவிலியர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதேசமயம், இந்திய மருத்துவ அமைப்பு, கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த மருத்தவர்கள் எண்ணிக்கை குறித்தும், சுகாதாரப் பணியாளர்கள் குறித்த எண்ணிக்கையையும் தெரிவித்துள்ளது. அதுகுறித்தும் கவனத்தில் கொள்ளப்படும். பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டம் மூலம் இழப்பீடு தொகை வழங்கப்படும்.
உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தது குறித்து மாநில அரசு அல்லது மத்திய அரசு சான்று, மருத்துவர்கள் சான்று, பணிபுரிந்த இடம், அலுவலகம் ஆகியவை குறித்த சான்றுகள் இழப்பீடு பெறுவதற்கு அவசியம்” எனத் தெரிவித்தார்.
தெற்காசியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சம் பேருக்கு உயிரிழந்தவர்களில் இந்தியாவில்தான் அதிகம். அதற்கான காரணம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் பதில் அளிக்கையில், “தெற்காசிய நாடுகளான வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களோடு இந்தியாவை ஒப்பிடுவது சரியல்ல. அந்த நாடுகளின் பூகோள அமைப்பு, இயற்கைச் சூழல், மக்கள் நெருக்கம், பரிசோதனை, மக்கள் அடர்த்தி ஆகியவை வேறுபடும்.
இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளோடு, இந்தியாவில் கொரோனாவில் பாதகிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள், அதாவது ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்தான். உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டதில் உயிரிழப்பு மிகவும் குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்” எனத் தெரிவித்தார்.
Facebook Comments Box