சென்னையில் குழந்தைகளிடையே தொழுநோய் பாதிப்பு உயர்வு – கவலைக்கிடமான நிலை
சென்னை மாநகரில் தொழுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுச் சுகாதாரத் துறையினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை, 2021 முதல் 2025 வரை நகர்ப்புறங்களில் பதிவான புதிய தொழுநோய் சம்பவங்களை ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வு அறிக்கையின் படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை நகரில் மட்டும் 515 புதிய தொழுநோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
2020–21 ஆம் ஆண்டுகளில் லட்சம் பேருக்கு ஒருவர் என்ற அளவில் இருந்த பாதிப்பு விகிதம், 2024–25 காலகட்டத்தில் 1.3 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இடைப்பட்ட 2022–23 ஆண்டுகளில், இந்த விகிதம் 2 சதவிகிதத்துக்கும் மேலாக இருந்ததும் ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.
மாநில அளவில் பார்க்கும்போது, தமிழகத்தில் புதிய தொழுநோய் பாதிப்புகள் தேசிய சராசரியை விட குறைவாக இருந்தாலும், பெருநகரங்களில் குறிப்பாகச் சென்னையில் நோய் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் சவால்கள் நீடித்து வருகின்றன.
மேலும், மாநிலத்தின் மொத்த சராசரியுடன் ஒப்பிடுகையில், சென்னையில் குழந்தைகள் மத்தியில் தொழுநோய் தாக்கம் அதிகமாக இருப்பது கவலைக்குரியதாக உள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு குடும்ப உறுப்பினர்கள் அல்லது அண்டை வீட்டார்களிடமிருந்து நோய் பரவியதற்கான ஆதாரம் இல்லை என்றும், வெளிமாநிலங்கள் அல்லது புலம்பெயர்ந்த மக்களிடமிருந்து நோய் பரவியிருக்கலாம் என்ற சந்தேகமும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது.