தாய்லாந்தில் சட்டமன்றம் கலைப்பு: விரைவில் பொதுத்தேர்தல்
வரும் ஆண்டின் தொடக்கத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடாக, தாய்லாந்து நாட்டின் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த தாய்லாந்தில், 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் பின்னர் கூட்டணி அரசு அமைந்தது. தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் காரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் அனுடின் சார்ன்விரகுல் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
அவர் பதவியேற்ற சமயத்திலேயே விரைவில் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் தற்போது நாடாளுமன்றத்தை கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோன் அரச அங்கீகாரம் வழங்கியுள்ளார். இதன் அடிப்படையில், வரும் ஜனவரி மாத இறுதி அல்லது பிப்ரவரி மாத ஆரம்பத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.