குமரியில் விடிய விடிய கனமழை – திற்பரப்பு அருவியில் குளிக்க தடை
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழை, நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழையாக மாறியது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் ஓடைகள் பெருக்கெடுத்து ஓடியன.
குறிப்பாக திற்பரப்பு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு மற்றும் மலையோர பகுதிகளில் மழை மிகுந்து பெய்தது. அதிகபட்சமாக சிற்றாறு 1 பகுதியில் 55 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல், பெருஞ்சாணி 47 மிமீ., திற்பரப்பு 48 மிமீ., சிவலோகம் 46 மிமீ., புத்தன் அணை 42 மிமீ., பேச்சிப்பாறை 41 மிமீ., களியல் 40 மிமீ. மழை பதிவாகியுள்ளது.
மழை காரணமாக பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று 42 அடி உயரத்திற்கு சென்றுள்ளது. அணைக்கு 874 கனஅடி தண்ணீர் உள்வரத்தாகவும், 477 கனஅடி வெளியேற்றமாகவும் பதிவாகியுள்ளது. அதேபோல், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.50 அடி வரை உயர்ந்துள்ளது.
தொடர் மழையால் குமரி மாவட்டத்தில் மீன்பிடி பணிகள் பாதிக்கப்பட்டன. சுமார் 50 சதவீத படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் தென்னை சார்ந்த தொழில்கள், உப்பளம், செங்கல் சூளை, ரப்பர் பால்வெட்டுதல் உள்ளிட்ட பல தொழில்களும் செயலிழந்தன.
மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இன்றைய அரசு விடுமுறை காரணமாக, மழைக்கு மத்தியில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வந்தனர். மழையால் பிற இடங்களுக்கு செல்ல முடியாததால், அவர்கள் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலம் உள்ளிட்ட இடங்களுக்கு படகு மூலம் செல்ல ஆர்வம் காட்டினர். இதனால், படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர்.