வகுப்பறையில் மதுபானம் அருந்திய 9ஆம் வகுப்பு மாணவிகள் – 6 பேர் தற்காலிக நீக்கம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில், வகுப்பறைக்குள் மாணவிகள் மதுபானம் அருந்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 6 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் பயிலும் 9ஆம் வகுப்பு மாணவிகள் சிலர், வகுப்பறையிலேயே மது அருந்தியதாகத் தகவல் வெளியானது.
இந்த சம்பவத்தைப் பார்த்த மற்றொரு மாணவி, தனது கைப்பேசி மூலம் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அதில், மாணவிகள் போதையில் தடுமாறி நடந்துகொண்ட காட்சிகள் பதிவாகி, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து காவல்துறை, பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட 6 மாணவிகளும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, சிறுவயது மாணவிகளுக்கு மதுபானம் விற்பனை செய்தவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.