பட்டா வழங்குவதாகச் சொல்லி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக பெண்கள் புகார் – மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனுத் தாக்கல்
மதுரை தல்லாகுளம் அருகே கமலா நகரில் வசிக்கும் பெண்கள் குழு, பட்டா வழங்குவதாகச் சொல்லி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர்.
கமலா நகரில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இவர்கள் பலமுறை பட்டா கோரி அரசிடம் விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் அளவீடு செய்து, 40 வீடுகளுக்கும் பட்டா வழங்கப்படும் என உறுதியளித்திருந்தனர்.
ஆனால் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் 19 பேருக்கே மட்டுமே பட்டா வழங்கப்பட்டதால், அப்பகுதிவாசிகள் அதிருப்தியடைந்தனர். மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கே பட்டா வழங்கப்பட்டிருப்பது சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக பெண்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், ஆதி தமிழர் பேரவையினருடன் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரினர்.