அரக்கோணத்தை ஒட்டிய பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட கொள்முதல் மையத்தில் நெல் மூட்டைகள் சேதம்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட நெல் கொள்முதல் மையத்தில், நெல் மூட்டைகள் மழைநீரால் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சைனபுரம் கிராமத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் மையம் சுமார் 10 நாட்களுக்கு முன்பே மாவட்ட நிர்வாகத்தினால் தொடங்கப்பட்டது.
ஆனால், இங்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் உடனடியாக வாங்கப்படாமல் அப்படியே குவியலாக வைக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், மையத்தில் பொறுப்பு அதிகாரிகள் எவரும் பணியில் இல்லாமல் இருப்பதாலும், வேளாண்மை துறை அலட்சியம் காரணமாக ஆயிரக்கணக்கில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த மூட்டைகள் நீண்ட நேரம் குவியலில் இருந்ததால் பெய்த மழையில் நனைந்து சேதமடைந்ததாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.