திருமுல்லைவாயில் வீடுகளில் வெள்ளம் புகுந்தது – குடியிருப்புவாசிகள் அவதி
சென்னையைச் சுற்றிய திருமுல்லைவாயில் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் நுழைந்து, குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்தில் உள்ளனர்.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட மணிவாசகம் தெரு, காமராஜர் தெரு, பாரதியார் தெரு போன்ற பகுதிகளில், பிரதான சாலைகள் மட்டுமின்றி குடியிருப்பு தெருக்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீர் நுழைந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள் வெள்ளத்தில் மிதந்து நாசமடையும் அபாயம் உள்ளது.
குடியிருப்புகளை மழைநீர் குளம் போல் சூழ்ந்ததால் மக்கள் இயல்பான வாழ்கை செயற்பாடுகளை நிறுத்தியுள்ளனர். மேலும், தேங்கிய தண்ணீரில் விஷமான பூச்சிகள் வீடுகளில் நுழைய வாய்ப்பு இருப்பதாகவும் குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சென்னைக்கு அருகிலுள்ள சேலையூர் பகுதியில் சாலையோர மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. மின் கம்பிகள் மீது விழுந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் மாநகராட்சி பணியாளர்கள், ஜேசிபி வாகன உதவியுடன் அந்த மரத்தை அகற்றினர்.