டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு செய்ய நீதிமன்றம் புதிய உத்தரவு!
டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையங்களுடன் இணைந்த பார் பகுதிகளில், விதி மீறி மதுவிற்பனை நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய அவசர ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகிலுள்ள பாரில், இரவு 10 மணிக்குப் பிறகும் சட்டத்துக்கு புறம்பாக மதுப்பானங்கள் விற்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தேவராஜன் என்ற நபர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
டாஸ்மாக் கடை ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் சேர்ந்து பார் உரிமையாளர்கள், அனுமதி இல்லாத நேரங்களில் ரகசியமாக மதுவிற்பனை நடத்துகின்றனர் என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி, டாஸ்மாக் கடைகளுக்கு இணைந்த பார்களில் விதிமீறல்கள் நடக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் காவல்துறைக்கும் திடீர் சோதனைகள் நடத்த உத்தரவிட்டார்.