பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்: பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் வலியுறுத்தல்
திருவாரூர்: மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மாங்குடி பகுதியில் சமீபத்திய கனமழை மற்றும் வெள்ளத்தால் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த விளைநிலைகளை கருப்பு முருகானந்தம் நேரில் சென்று ஆய்வு செய்தார். விவசாயிகள் சந்தித்த இழப்புகள் மற்றும் நிலைமை குறித்து அவர்களிடம் நேரடியாக தகவல்கள் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“வடிகால் வாய்க்கால்களில் பெருமளவில் வளர்ந்திருந்த ஆகாய தாமரைகளை அரசு முன்கூட்டியே அகற்றியிருந்தால், மழைநீர் வயல்களில் தேங்காமல் ஓடியிருக்கும். இதனால் விளைநிலங்கள் இவ்வளவு சேதமடையாமல் இருந்திருக்கும்” என கூறினார்.
மேலும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, விளைநில சேதத்தை மதிப்பீடு செய்து, ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.