மாற்றுத்திறனாளிகள் பரிதாபத்திற்கு உரியவர்கள் அல்ல; அவர்கள் மிகுந்த திறன்கள் கொண்டவர்கள் – ஆளுநர் ஆர். என். ரவி
மாற்றுத்திறனாளிகள் நம்மை விட வலிமைமிக்கவர்கள், அவர்களை இரக்கப் பார்வையில் பார்க்காமல் அவர்களின் திறமைகளை உயர்த்திப் பாராட்ட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள லோக்பவனில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றது.
ஆளுநர் ரவி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் நிர்வாகிகள் மற்றும் பல துறைகளில் சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
பின்னர் உரையாற்றிய அவர்,
மாற்றுத்திறனாளிகள் உடல் குறைபாடு காரணமாகப் பலவீனர்கள் அல்ல; மாறாக, அவர்களின் மன வலிமை, தனித்திறன் மற்றும் முயற்சி அவர்களை இன்னும் வலுவானவர்களாக ஆக்குகின்றன என்று கூறினார். அவர்களின் திறமைகளை சமூகமும் அரசு அமைப்புகளும் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்ற சக மனிதர்கள் போல் சம உரிமைகளால் பாதுகாக்கப்படுகிறார்கள்; அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள் அனைத்தும் அவர்களுக்கும் முழுமையாக கிட்ட வேண்டும் என்றார்.
இது ‘ராஜ் பவன்’ என அறியப்பட்ட இடத்துக்கு பதிலாக ‘லோக்பவன்’ என்னும் புதிய பெயரில் நடைபெறும் முதல் நிகழ்ச்சியாக இருப்பது தனக்கு பெருமை அளிப்பதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.