கரூரில் ஆய்வு – ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் மூவர் குழு!
தவெக துயரச் சம்பவம் குறித்த வழக்கின் முன்னேற்றத்தை கண்காணிக்கும் நோக்கில், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தை வந்தடைந்து ஆய்வு மேற்கொண்டது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததுடன், 110 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது. இதுவரை உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள், தவெக நிர்வாக உறுப்பினர்கள் உட்பட பலரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
இந்த நிலையில், விசாரணை போக்கை மேற்பார்வை செய்யும் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்பு குழு கரூருக்குச் சென்று, சிபிஐ சேகரித்துள்ள தகவல்கள் மற்றும் ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்தது.