திருமணத்துக்கு சில நிமிடங்களிலேயே மணமகன் மரணம் – குளத்தில் சடலமாக மீட்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, திருமணம் நடந்த சில நிமிடங்களிலேயே மணமகன் குளத்தில் மர்மமான சூழலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார், உளுந்தூர்பேட்டை பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதல் உறவில் இருந்தார்.
இரு குடும்பங்களின் சம்மதத்திற்குப் பிறகு, இவர்களின் திருமணம் அரும்பாக்கம் குளக்கரையில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலில் நடைபெற்றது.
ஆனால், திருமண விழா முடிந்து சில நொடிகளில் அஜித்குமார் திடீரென கண்ணுக்கு தென்படாமல் போனதால், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை தீவிரமாகத் தேடத் தொடங்கினர்.
தேடுதல் நடவடிக்கைகளின் போது, அருகிலிருந்த குளத்தில் அஜித்குமாரின் உடல் மிதந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, மரணத்தில் ஏதேனும் சந்தேக நிலைகள் உள்ளதா என்பதை தெளிவுபடுத்த விசாரணை நடத்தி வருகின்றனர்.