சென்னை : 10 மாதங்களாக நின்றுவிட்ட பாலம் பணிகள்
சென்னை அரும்பாக்கம் பகுதியில் சுமார் 10 மாதங்களாகப் பாலம் கட்டும் பணி நிறைவடையாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் 2 கிலோ மீட்டர் நீளப் பாதையை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
எம்எம்டிஏ காலனியின் தமிழர் தெருவில், ஆற்றின் மீது அமைக்கப்பட வேண்டிய பாலப் பணிகள் இதுவரை முடிக்கப்படாமல் இருப்பது பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் தடையாக உள்ளது.
இதன் விளைவாக, பெரியார் சாலையிலிருந்து அண்ணா நகர் மற்றும் அமைந்தகரை நோக்கிச் செல்லும் முக்கிய வழி முடக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
10 மாதங்களாக பணிகள் செயலற்ற நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், தேவையற்ற நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
பாலப் பணிகளை உடனடியாக மீண்டும் ஆரம்பித்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.