திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழகத்தில் உருவாக வேண்டிய பொரும்பாலான தொழில் முதலீடுகள், அருகிலுள்ள ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருவதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விளம்பரத்திற்காக செலுத்தப்படும் அதிக கவனம், முதலீடுகளை ஈர்ப்பதிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் காட்டப்படவில்லை என்ற கருத்தும் வலுத்து வருகிறது.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் திமுக ஆட்சியில், பல்வேறு முதலீட்டு மாநாடுகள், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் எனப் பல்வேறு முயற்சிகள் மூலம் 11 லட்சம் கோடியேற்பட்ட முதலீடுகளை ஈர்த்ததாகவும், அதன்மூலம் 34 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் அரசு தெரிவிக்கிறது.
ஆனால், அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மையில் செயல்பாட்டுக்கு வந்த முதலீடுகள் இடையே மிகப்பெரிய விரிசல் இருப்பதாக தொழில்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தமிழகத்தை நோக்கி வர வேண்டிய வெளிநாட்டு முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு திரும்பிச் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,
- 2021 முதல் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தங்களில் 23% மட்டுமே,
- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் 16% மட்டுமே நடைமுறையில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதனால், கிட்டத்தட்ட 80% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெறும் ஆவணமாகவே இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் நடந்த தொழில் முதலீட்டு மாநாட்டில் தென்கொரியாவின் ஹுவாசிங் காலணி நிறுவனம் தமிழகத்தில் ரூ.1,720 கோடி மதிப்பில் தொழிற்சாலை அமைப்பதாக அறிவித்தது. ஆனால் நிலம் ஒதுக்கப்படுவதில் ஏற்பட்ட குழப்பத்தால், அந்த நிறுவனம் திட்டத்தைத் தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு மாற்றி விட்டது.
அதேபோன்று, உலகின் முன்னணி ஏசி உற்பத்தி நிறுவனமான ஜப்பானின் டைகின், தனது ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையத்தை ஆந்திராவின் ஸ்ரீநகரில் அமைக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. கூகிளின் செயற்கை நுண்ணறிவு தரவு மையமும் தமிழகத்தின் மாற்றாக ஆந்திராவையே தேர்வு செய்துள்ளது.
ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தொழில்துறைக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு சலுகைகள் — வருடத்திற்கு ஏக்கருக்கு ₹99 குத்தகை, மின்சார சலுகைகள், முதலீட்டாளர் நட்பு கொள்கைகள் — ஆகியவற்றின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களை குவித்து வருகிறார். இதேபோன்று தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களும் முதலீடுகளை ஈர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
ஆனால், தமிழக அரசோ, இவை அனைத்தையும் சமாளித்து முதலீடுகள் வரும்விதமாகச் செய்யாமல், விளம்பரங்களில் கவனம் செலுத்துவதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.
அதிமுக ஆட்சியின் பத்து ஆண்டுகால நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட திமுக அரசு, தாம் ஈர்த்ததாக கூறப்படும் முதலீடுகள் தொடர்பாக இதுவரை எந்த வெள்ளையறிக்கையும் வெளியிடாதது சந்தேகத்துக்கு இடம் கொடுக்கிறது.
புதிய முதலீடுகளை கவர முடியாமலும், ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்ற முடியாமலும் தவிக்கும் நிலையில், தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் தவறி வருகின்றன என்பது குற்றச்சாட்டு.
எனவே, விளம்பரச் செலவுகளால் அரசுப் பணத்தை விரயம் செய்யாமல், மாநிலத்திற்கு புதிய முதலீட்டுகளை கொண்டு வரவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.