மயிலாடுதுறை புறநகர்பகுதிகளில் கொட்டிய மழை – வீடுகள் நீரில் மூழ்கி மக்கள் சிரமம்
மயிலாடுதுறை சுற்றுப் பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக பல குடியிருப்பு வீடுகள் வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
டிட்வா புயலின் தாக்கத்தால் மயிலாடுதுறையைச் சூழ்ந்த பகுதிகளில் கனமழை பெய்தது. சீனிவாசபுரம், கீழப்பட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் நூற்றுக்கணக்கான வீடுகள் சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தேங்கிய நீரை வெளியேற்ற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறையின் பல இடங்களில் இடைவிடாத கனமழை காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கடந்த மூன்று நாட்களாக மாவட்டம் முழுவதும் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், செம்பனார்கோவிலில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவானது.
புது தெரு, அம்பேத்கர் நகர் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் நுழைந்ததால் மக்கள் கடும் துயரத்தில் இருக்கின்றனர். சரியான வடிகால் வசதி இல்லாததே இந்த நிலைக்கு காரணம் எனக் கூறிய மக்கள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடியிலும் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் தெருக்களில் நீர் தேங்கி, மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால்கள் முறையாக சுத்தம் செய்யப்படாததே இத்தகைய சிக்கலுக்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.