எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலம் குழப்பம் – பாஜகவுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்துவது மூலம் பாஜக என்ன சாதிக்க முயல்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
“நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மட்டும் அல்லாமல், நாட்டின் மக்களின் மனங்களிலும் ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றில் சில கேள்விகளை நான் நேரடியாக முன்வைக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் எழுப்பிய சில கேள்விகள் பின்வருமாறு:
“ஊழலில் சிக்கியவர்கள் பாஜக கூட்டணியில் சேர்ந்தவுடன் வாஷிங் மெஷினில் வெளுப்பது போல சுத்தமாக்கப்படுவது ஏன்?
நாட்டின் முக்கியமான திட்டங்கள், சட்டங்கள் அனைத்துக்கும் இந்தியா அல்லது சம்ஸ்கிருதப் பெயர்கள் மட்டுமே வைக்கப்படுவது எந்த வகையான ஆணவம்?
மத்திய அமைச்சர்கள் தாமே குழந்தைகளுக்கு அறிவியலுக்கு முரணான மூடநம்பிக்கைகளைப் பரப்புவது ஏன்?
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரை பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்துவது எதற்காக?
பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக மக்களின் வாக்குகளை பறிக்கும் வாக்குத் திருட்டை ஏன் ஆதரிக்கிறீர்கள்?
கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையில் தமிழின் தொன்மையை அறிவியல்பூர்வமாக நிரூபித்திருப்பதை அங்கீகரிக்க மனமில்லாமல் தடுக்க முயல்வது ஏன்?”
இத்தகைய கேள்விகளுக்கு பாஜக பதில் தருமா, அல்லது வழக்கம்போல வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியில் பொய்யான பிரசாரம் தொடங்குமா என்பதே மக்களின் கேள்வி என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.