சித்தியைத் தொந்தரவு செய்த மகனை தந்தை கொன்ற பதறவைக்கும் சம்பவம் – தருமபுரியில் அதிர்ச்சி
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில், சித்திக்கு பாலியல் ஏளனம் செய்த மகனை, தந்தையே கொலை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியாம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஜொள்ளம்பட்டியில் வசிப்பவர் ஜெயசங்கர். அவரின் முதல் மனைவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் சித்ரா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியால் சரவணன் என்ற மகன் இருந்தார்; இரண்டாவது மனைவி சித்ராவால் மேலும் இரு மகன்கள் உள்ளனர்.
சரவணன் எந்த வேலையும் செய்யாமல், தினமும் மது அருந்தி வீட்டில் தகராறு செய்து வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் தனது சித்திக்கே பாலியல் தொல்லை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த ஜெயசங்கர், தன் மகன்கள் கோவிந்தராஜ், அன்பரசு ஆகியோருடன் இணைந்து சரவணனை செங்கற்களால் தாக்கி கொலை செய்ததாக விசாரணையில் வெளிப்பட்டது.
கொலைக்கு பின், யாரோ தெரியாத நபர்கள் சரவணனை தாக்கி கொன்றதாக நாடகமாடி, தானே போலீசில் தகவல் கொடுத்தார் ஜெயசங்கர். எனினும் விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்ததால் ஜெயசங்கர் மற்றும் அவரது இரு மகன்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.