நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு, நிர்வாகக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோபிசெட்டிப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். பின்னர், பட்டினம்பாக்கத்தில் விஜயை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில், பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கோட்டையன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா உள்ளிட்ட பலர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
அந்த தருணத்தில், சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து செங்கோட்டையனை விஜய் அன்புடன் வரவேற்றார்.
மேலும், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என நான்கு மாவட்டங்களுக்கு தவெக அமைப்பின் பொதுச்செயலாளர் பொறுப்பும், தலைமைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை வரவேற்று நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
அதில், மிக இளவயதிலேயே சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றவர் செங்கோட்டையன் என்றும், முன்னாள் இரண்டு தலைவர்களுக்கும் நம்பிக்கைக்குரியவராக அரசியலில் முக்கிய பங்கு வகித்தவர் என்றும் விஜய் குறிப்பிடுகிறார்.