ரயில் முன் தள்ளி காதலியை கொன்ற வழக்கில் — சதீஷுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் சிறைத் தண்டனையாக மாற்றம்!
காதலித்த இளம் பெண்ணை ரயில் முன்னால் தள்ளி கொலை செய்த குற்றத்தில் மரண தண்டனை பெற்றிருந்த சதீஷுக்கு, அந்த தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்த கல்லூரி மாணவியும் சதீஷும் ஒருவரை ஒருவர் காதலித்ததாக கூறப்பட்டது. குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மாணவி அவருடன் பேசுவதை நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
2022 அக்டோபர் 13ஆம் தேதி, கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த மாணவியை, மின்ரயிலில் தள்ளி கொன்றதாக சதீஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து, பின்னர் சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் சதீஷுக்கு மரண தண்டனை வழங்கியது.
மரண தண்டனையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில், வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அதே நேரத்தில், சதீஷ் சார்பிலும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதிஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்தபின் இன்று உத்தரவு வழங்கியது.
தீர்ப்பில், சதீஷுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் சிறைத் தண்டனையாக மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 20 ஆண்டுகளுக்குள் எந்தவித தண்டனை தளர்வும் வழங்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது.