மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பணியில் இருந்த ஆயுத படை காவலர் துப்பாக்கியால் உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம்!
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு ஆயுதப்படை காவலர், குறிப்பு ஒன்றை எழுதி விட்டு, தனது சேவைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம், 2023 ஆம் ஆண்டு முதல் சிறப்பு படை காவல்துறையில் பணியாற்றி வந்தார். உயர்நீதிமன்ற கிளை வளாகத்தின் முன்புற பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த அவர், அதிகாலை சுமார் 3 மணியளவில் துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
துப்பாக்கி சத்தத்தை கேட்ட சக காவலர்கள் விரைந்து சென்று மகாலிங்கத்தை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
உடல் பிரேதபரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் மாற்றப்பட்டது. சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாலிங்கம் எழுதியதாகக் கூறப்படும் குறிப்பில், “என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை” என குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும், தற்கொலையின் பின்னணி குறித்து பல திசைகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.