‘தாமரை’ முகாமில் புதிய ‘தமிழ்த் தேசிய தலைவி’? – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
தமிழ்த் தேசியம் என்ற வார்த்தையையே அடிக்கடி மேடைகளில் முழங்கியிருந்த அந்த ‘தலைவி’, சில மாதங்களுக்கு முன்பு தன் சொந்தக் கட்சியுடன் ஏற்பட்ட மனக்கசப்புகளை வெளிப்படுத்தி விலகியிருந்தார்.
அதன்பின் அவர், தேனாம்பேட்டை முகாம் நோக்கி நகரலாம் எனக் கூறப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தையை கடலோர மாவட்டத்தின் ஒரு முக்கிய அமைச்சரே முன்னெடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதையடுத்து, கட்சிக் கலரை ஓரளவு மறைத்தபடி, “சமூகப் போராளி” என்ற முகமூடி அணிந்து மீண்டும் மேடைகளில் தோன்ற ஆரம்பித்தார்.
இந்நிலையில், பனையூர் முகாமின் முக்கிய நபர் (‘லக்கி நாட்டாமை’ என அரசியல் வட்டாரம் கூறும்வர்), தலைவியின் துணைவனைத் தனது ஈசிஆர் பங்களாவில் அழைத்து சந்தித்ததாக தகவல்கள் கூறுகின்றன. அப்போது, “நாங்களும் இனி இலவசமாக பேச முடியாது; மாதா மாதம் எங்களுக்கும் ஒரு ‘பேட்டா’ வேண்டும்” என்ற அவரின் கோரிக்கைக்கு, அங்குள்ளவர் சிரித்தபடி “பின்னர் பார்க்கலாம்” எனச் சொல்லி அனுப்பிவைத்தாராம்.
இதனால், இருந்த இடத்தையும் விட்டு, புதிய வாய்ப்புகளும் தவறி, அரசியல் இடைநிலையிலே சிக்கியிருந்த அந்த தலைவி, தற்போது ‘தாமரை’ முகாமின் கவனத்தை ஈர்த்துவிட்டார் என கூறப்படுகிறது.
அதற்கேற்ப, சமீபத்தில் அவர் “வாக்கு அரசியலை நோக்கிப் பயணிக்கிறோம்” என சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். இதேசமயம், ‘தலைவி’யின் பெயரை குறிப்பிடிக் கொண்டு “விரைவில் அவர் நம்மோடு” என சில ‘தாமரை’ ஆதரவாளர்கள் தளங்களில் தம்பட்டம் அடிப்பதும் கவனிக்கப்பட்டுள்ளது.
அரசியல் வட்டாரத்தில் இதனால் புதிய அலசல் எழுந்துள்ளது.