“சீட்டை வாங்கித்தான் விருதுநகருக்கு வருவேன்!” – மாஃபா பாண்டியராஜனின் சபதம்!
விருதுநகர் அரசியலில் மீண்டும் தீவிரம் ஏறியுள்ளது. முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “அதிமுக தலைமையிடத்திலிருந்து விருதுநகர் தொகுதி சீட்டை உறுதி செய்துக் கொண்டே தான் ஊருக்குத் திரும்புவேன்” என்று தனது நெருக்கமானோரிடம் சபதம் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னணி
2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வேட்பாளராக விருதுநகரில் வெற்றி பெற்றார் பாண்டியராஜன். பின்னர் அதிமுகவில் இணைந்து, 2016-இல் ஆவடி தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரானார். அதேசமயம், அதே அமைச்சரவைச் சகாக்களாக ஆர்.பி. உதயகுமார் (திருமங்கலம்) மற்றும் கே.டி. ராஜேந்திர பாலாஜி (சிவகாசி) இருந்தனர்.
பாண்டியராஜன் மற்றும் உதயகுமார் இருவரும் விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே சென்றதால், அப்பகுதியில் ராஜேந்திர பாலாஜி அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.
பனிப்போர் ஆரம்பம்
பாண்டியராஜன், கடந்த மக்களவைத் தேர்தல் காலத்தில் விருதுநகரில் வீடு கட்டி குடியேறி, அங்கிருந்து போட்டியிடத் தயாராகியிருந்தார். ஆனால், அவர் மீண்டும் அரசியலில் களம் காண்பது ராஜேந்திர பாலாஜிக்கு பிடிக்காமல், விருதுநகர் தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கச் செய்ததாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுவே இருவருக்குமான பனிப்போரின் தொடக்கமாக அமைந்தது.
அதன்பின், பாண்டியராஜன் அரசியலில் தன்னை ஓரளவு விலக்கிக் கொண்டு, மும்பையில் தனது வணிகச் செயல்பாடுகளில் ஈடுபட்டார். இதே காரணத்தால், எடப்பாடி பழனிசாமி விருதுநகரில் பிரச்சாரம் செய்தபோதும், அங்குச் செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.
மீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாண்டியராஜன்
இப்போது சென்னைக்கும் மும்பைக்கும் இடையே பிஸியாகச் சுற்றிவரும் பாண்டியராஜன், தன் நெருக்கமான ஆதரவாளர்களிடம்,
“விருதுநகர் மாவட்டத்தில் சும்மா பெயர் சொல்ல அரசியல் செய்ய விரும்பவில்லை. உரிமையுடன் வந்து உறுதியான முறையில் அரசியல் செய்யப் போகிறேன். இந்த முறை சீட்டை வாங்கிக் கொண்டே தான் ஊருக்கு வருவேன்!”
என்று உறுதியாக தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இச்செய்தியால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் தலைவரை மீண்டும் களத்தில் காணப் போவதாக நம்பும் பாண்டியராஜன் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.