கன்னியாகுமரி : கிராம நிர்வாக அலுவலரிடம் ஒருமை குரலில் பேசியதாக ஆட்சியர் மீது புகார் – RDO அலுவலகம் முற்றுகை
கன்னியாகுமரியில் கிராம நிர்வாக அலுவலரை மரியாதையில்லாமல் ஒருமையில் பேசியதாகக் கூறி, 150-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது, வாக்குச்சாவடி நிலை கண்காணிப்பாளராக உள்ள புத்தேரி கிராம நிர்வாக அலுவலர் நாகேஸ்வரகாந்திடம், ஆட்சியர் ஒருமையில் திட்டியதோடு, அவரது மொபைல் போனைப் பறித்து கூட்டம் நடுவே எறிந்து அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், அங்கு பணியாற்றும் பெண் கிராம நிர்வாக ஊழியரின் தோற்றத்தை கேலி செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள், ஆட்சியருக்கு எதிராக புகார் அளித்து, பின்னர் நாகர்கோவில் அமைந்துள்ள கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூழ்நிலை பதட்டமாக மாறியதால், இடத்தில் பரவலாக போலீஸ் பாதுகாப்பு அமர்த்தப்பட்டது.