தமிழகத்தில் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் வன்முறைகள் பள்ளிகளில் இருந்து மத ஸ்தலங்கள் வரை தொடர்கின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தான் வெளியிட்டுள்ள X பதிவில் அவர் கூறியதாவது:
விருதுநகர் மாவட்ட நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள தர்காவில், அஸ்ரத் பொறுப்பில் இருந்த அப்துல் அஜீஸ் என்ற நபர், புனித நீர் தெளிக்க வருகைத்தந்த ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்த முயன்றதோடு, கத்தியால் குத்தி தாக்கியுள்ளதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. இத்தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ள அந்த பெண் விரைவில் முழுமையாக குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வி நிலையம் முதல் புனித பள்ளிவாசல் வரை பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்ந்தால், திமுக ஆட்சியும் அதன் சட்ட-ஒழுங்கு இயந்திரமும் குற்றவாளிகளால் மதிக்கப்படவில்லை என்பதற்கு இது நேரடி சான்று அல்லவா? என நயினார் கேள்வி எழுப்புகிறார். மேலும், அப்துல் அஜீஸ் மீது முன்பே பல பாலியல் புகார்கள் இருந்ததாக செய்திகள் வந்தபோதும், அவர் எப்படி தர்காவின் பொறுப்பில் நியமிக்கப்பட்டார் எனவும் அவர் சந்தேகம் எழுப்பினார்.
அத்துடன், விருதுநகரை முழுவதும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவம் குறித்து திமுகவின் பெண் பிரமுகர்கள் மற்றும் பிற தலைவர்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏன்? இது முஸ்லீம் சமூகத்தின் வாக்குகளைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சமா, இல்லையெனில் வழக்கம்போல குற்றவாளிக்கு பின்னால் ஆள்கள் உள்ளனரா? என்று அவர் எதிர்ப்புரையிட்டுள்ளார்.
சமூகநீதி, மத நல்லுறவு போன்ற விஷயங்களில் உரையாற்றும் திமுக அரசு இந்த வழக்கில் எந்த தளர்வும் இல்லாமல் நடவடிக்கை எடுத்து, குற்றவாளி கடுமையாகத் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழுமையான நீதி கிடைக்க முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.