சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம் ஆகிய துறைகள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை, சி.எம்.டி.ஏ. தானாக முனைந்து நிறைவேற்றி வருவதால், அந்த அமைப்பின் நிதி சேமிப்பு வேகமாகச் சுருங்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
50 ஆண்டுகளை கடந்துள்ள சென்னை பெருநகர் வளர்ச்சி ஆணையத்தின் முதன்மை பொறுப்புகள் – நகரின் முழுமைத்திட்டம், விரிவான மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்குதல், கட்டிடத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் போன்றவையாகும்.
ஆனால், சமீபகாலமாக நகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களைச் சி.எம்.டி.ஏ. நிறைவேற்றி வருவதாகவும், இதனால் அதன் நிதிச்சேமிப்பு குறைந்து வருவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கோயம்பேடு வணிக வளாகம், பேருந்து நிலையம், சாத்தாங்காடு சந்தை வளாகம் உள்ளிட்டவை சி.எம்.டி.ஏ. மூலம் கட்டமைக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த திட்டங்களின் போது வீடு, கடை போன்ற சொத்துகள் விற்பனை செய்யப்பட்டதால், சி.எம்.டி.ஏ.-வின் நிதி இருப்பு 3,500 கோடியைத் தாண்டியது. அதேபோல் கட்டிட அனுமதிகளின் மூலம் வருடத்திற்கு சுமார் 400 கோடி வருவாய் கிடைப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு பணிகள் அதிகரித்ததனால், சி.எம்.டி.ஏ.-வின் சேமிப்பு நிதி வேகமாகக் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்த அண்ணா பல்கலைக்கழக நகர அமைப்பு துறை முன்னாள் பேராசிரியர் கே.பி. சுப்பிரமணியன், கடந்த இரண்டு ஆண்டுகளாக நகராட்சி, குடிநீர் வாரியம் செய்ய வேண்டிய பணிகளை சி.எம்.டி.ஏ. மேற்கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
இதனால் பணிகள் திசை மாறி பல புதிய சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும், சட்டத்தில் குறிப்பிடப்பட்ட தன் முக்கிய பணிகளில் சி.எம்.டி.ஏ. கவனம் செலுத்த அரசு கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.