மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வரும் நவம்பர் 20ஆம் தேதி சென்னை அடையாறு முத்தமிழ் பேரவையில், எங்கள் இயக்கம் அரசியல் கட்சியா, சமூக இயக்கமா அல்லது ஒரு சங்கமா என்பதை மக்கள் முன் அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார். திராவிட இயக்கத்தின் கொள்கைகளிலிருந்து பின்வாங்காத உறுதி தமக்குள் இருப்பதாகவும் கூறினார்.
மேலும் அவர் தொடர்ந்துபேசும்போது, “துரை வைகோ தற்போது கார்ப்பரேட் பாணியில் அரசியல் செய்கிறார். அவருக்கு எதிராக மதிமுகவில் இன்னும் பலர் அதிருப்தியில் உள்ளனர். மாமல்லபுரம் பகுதியில் ஒரு பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது போல, துரை வைகோவும் அரசியலில் பயிற்சி விமானி போல் தவறான பாதையில் செல்கிறார்” எனக் குற்றம் சாட்டினார்.
மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின், தன்னுடன் இருந்த நண்பர்கள் பலரும் திமுகவில் சேர வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் அது திமுக கூட்டணியை பலவீனப்படுத்தி, சங் பரிவார் சார்ந்த அமைப்புகளுக்கு மறைமுக நன்மை தரக்கூடும் என்பதால் அதை செய்யவில்லை என்றும் அவர் விளக்கினார்.